"வறட்சி நிவாரணத் தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்'

விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணத் தொகையை அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு முதன்மை செயலரும், திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேந்திரகுமார்.

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற வறட்சி மற்றும் குடிநீர்த் திட்டங்கள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையை, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்களது வங்கிக் கணக்கு எண், பெயர், முகவரி ஆகியவற்றை விவசாயிகள் சரியாக வழங்கியுள்ளார்களாக என சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். நிவாரணத் தொகை வரவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். அதில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால் அதுகுறித்து விளக்கத்தை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

எதிர்வரும் கோடைக்காலத்தில் குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம் (நகரம்-கிராமப்புறம்), நகராட்சி மற்றும் மாநகராட்சி உள்பட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படாத வண்ணமும், சீரான மற்றும் சுகாதார முறையில் வழங்கிட ஏற்பாடு செய்திட வேண்டும். தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி நாள்களை 150ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதனை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.
மார்ச் 16-க்குள் அறிக்கை: இக் கூட்டத்தில் ஆட்சியர்

மு.கருணாகரன் பேசுகையில், சீமைக் கருவேல மரங்களின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் காணப்படும் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றி மாவட்ட நிர்வாகத்திடம் புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை இம் மாதம் 16ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார்ஆட்சியர் வி.விஷ்ணு, உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.சாருஸ்ரீ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், கோட்டாட்சியர்கள் பெர்மிவித்யா (திருநெல்வேலி) வெங்கடேஷ் (தென்காசி) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter